மதுபோதையில் தகராறு: திமுக எம்.பி.யின் மகன்மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு…

சென்னை: நட்சத்திர ஓட்டலில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இரவு மதுஅருந்திவிட்டு வெளியே வந்த திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யாவுக்கும், பஜாஜ் நிறுவனத்தின் மண்டல தலைமை அதிகாரியாக  பணிபுரிந்து வரும் ஸ்ரீராம் என்பவருக்கும் இடையே போதை காரணமாக தகராற ஏற்பட்டு உள்ளது.  அப்போது, திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா, ஸ்ரீராமை பார்த்து 4 பீர் வாங்கி வரும்படி கூறியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பீர் பாட்டிலால் ஸ்ரீராமின் மண்டையில் சூர்யா அடிக்க முயன்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து,  ஸ்ரீராம் இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சூர்யா மீது புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,   திருச்சி சிவாவின் மகன் சூர்யா மீது 294(b)- ஆபாசமாக திட்டுதல், 323-காயம் ஏற்படுத்துதல், 506(1)-கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதைப்போல சூர்யா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீராம் மீது 294(b)-ஆபாசமாக திட்டுதல், 323-காயம் ஏற்படுத்துதல், 506(2)-கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நட்சத்திர ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். “ஸ்ரீராமும், சூர்யாவும் நண்பர்களாக இருந்துள்ளனர். இரு தரப்பு புகார்களையும் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளோம். யாரும் கைது செய்யப்படவில்லை என்று தேனாம்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சசிகலா புஷ்பா விவகாரத்தில் திருச்சி சிவாவின்  புகழ் கொடிகட்ட பறந்த நிலையில், தற்போது அவர் மகன் குடிபோதையில் நடத்திய தகராறு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.