மதுபோதை அவஸ்த்தை… தத்தளிக்கும் மத்திய அரசு….

கொரோனா பாதிப்புகளின் வெளிப்பாடுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்தபடியே உள்ளன. லேட்டஸ்ட் அதிர்ச்சி ரகம் இது.

நமது மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சமூக பாதுகாப்பு பிரிவு சேகரித்து அளித்துள்ள தரவுகள் பலவும் கேட்டால் கிறுகிறுக்க வைக்கின்றன.

இப்பிரிவின் கீழ் செயல்படும் 1800110031 என்ற குடிகாரர்கள் மற்றும் போதை மருந்து உபயோகிப் போரின் உதவிகளுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தினமும் வரும் அழைப்புகள் தற்போது 200% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றன இந்த தரவுகள்.

சாதாரணமாக தினமும் 90 அழைப்புகள் வரும் இந்த எண்ணிற்கு தற்போதைய அந்த ஊரடங்கு காலத்தில் சராசரியாக 266 அழைப்புகள் வரை வந்து அதிர்ச்சியூட்டியுள்ளது. எனவே அழைப்பு விடுத்த பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தேவையான அனைத்துவித சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கியாக வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது சம்பந்தப்பட்ட அமைச்சகம்.

இந்த எண்ணிற்கு ஏப்ரல் 5 முதல் 12 வரை, தினசரி 236 தடவைகளும், 13 முதல் 23 வரை, தினசரி 159 தடவைகளும் அழைக்கப்பட்டுள்ளன. இது ஊரடங்கு காலத்திற்கு முந்தியவைகளை விட அதிகம் என்கின்றனர் அதிகாரிகள்.

ஊரடங்கின் காரணமாக மதுக்கடைகள் அடைப்பு, ஊரடங்கினால் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டதால் போதை பொருள் சப்ளை இல்லாமல் போனது மற்றும் சிகரெட், போதை பாக்கு போன்ற புகையிலை பொருட்களின் தட்டுப்பாடால் உண்டான எரிச்சல் இவைகளே இந்த அழைப்புகளின் திடீர் அதிகரிப்புக்கு காரணமாக அறியப்பட்டுள்ளது.

ஆனால் போதைபொருட்கள் கிடைக்காமல் போனதை சந்தோசமான விசயமாக எடுத்துக்கொள்ள தயாராக இல்லை இந்த அமைப்பு. ஏனென்றால் இதை போன்ற கடின சூழ்நிலைகள், வெகு குறைவாக போதை பொருட்களை உபயோகிப்பவர்களை கூட மிக தீவிரமான முடிவுகளை எடுக்க வைத்துவிடும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே இவர்களுக்கு தகுந்த மனநல ரீதியிலான ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் இவற்றிலிருந்து விடுபட வைத்து இவர்களை வேறு மாற்று சிந்தனைகளில் ஈடுபட வைத்தல் போன்றவைகளை தொடர்ந்து வழங்குவது அவசியம் என்று வலியுறுத்தி அவைகளை செயல்படுத்தி வருகின்றனர்.

கடுமையான வருவாய் இழப்பால் தவிக்கும் மாநில அரசுகள் மதுக்கடைகளா திறக்கலாமா என்று கேட்டதற்கு, ஊரடங்கு காலத்தில் மதுவிற்பனை பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது என்பது நினைவு படுத்திக்கொள்ளவேண்டிய விஷயம்.

-லட்சுமி பிரியா