பெய்ஜிங்: பிரபல சீன தொழிலதிபரும், அலிபாபா நிறுவன தலைவருமான ஜாக் மா காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

அலிபாபா என்னும் நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவதும் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டமைத்தவர் ஜாக் மா. கடந்த அக்டோபரில் சீன தொழில் நிறுவனங்கள் மீது அந்நாட்டு அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது.

இதுபற்றி ஜாக் மா கடுமையான கருத்துகளை தெரிவித்ததால் சீன அரசு அவர் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்பட்டது. அதன் காரணமாக, அலிபாபா நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் ஆப்ரிக்காவின் பிஸினஸ் ஹீரோஸ் என்ற பெயரில் புதிய தொழில் முனைவோர்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர் குழுவில் ஜாக் மா சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஜாக் மாவிற்கு பதிலாக அலிபாபா நிறுவனத்தின் வேறொரு அதிகாரி பங்கேற்றார்.

அதன்பிறகு ஜாக் மா எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. ஆகையால் அவர் எங்கே? காணாமல் போய்விட்டாரா? என்று ஊடகங்கள் கேள்விகள்  எழுப்பி வருகின்றன. சீன அரசானது அவரை வலுக்கட்டாயமாக வீட்டில் இருத்தி வைத்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.