ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 6 பிஎஸ்பி எம்எல்ஏக்களும் கூண்டோடு காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர், இதன் காரணமாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்   மாயாவதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சத்திஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.  ராஜஸ்தானில் முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு (2018) டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற்றச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தது. அங்கு மொத்தம் உள்ள 2௦௦ தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. ஒரு தொகுதியில் வாக்காளர் இறந்து விட்டதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதில், காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளைக் கைப்பற்றியது.  பாஜக 73 தொகுதிகளிலும் சுயேச்சைகள் மற்றும் இதரக் கட்சிகள் 27 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். மாநிலத்தில் ஆட்சி அமைக்க 100 உறுப்பினர்கள் தேவை எனும் நிலையில், காங்கிரஸ் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

தற்போது பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களும் மொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். முன்னதாக முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்த 6 பேரும் அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டு, மாநில சபாநாயகரை சந்தித்து, தாங்கள் காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கான கடிதத்தை ஒப்படைத்தனர்.

இதன் காரணமாக  200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரஸின் எண்ணிக்கை 106 ஐ எட்டி தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது.  பிஎஸ்பி எம்எல்ஏக்களின்  இணைப்பு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.