டில்லி,

தார் தொடர்பான அனைத்து  வழக்குகளையும்  அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு  பல்வேறு சமூக நல திட்டங்கள்  ஆதாரை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே பல கட்டங்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு  பதவி வகித்தபோது ஆதார் திட்டத்தை கொண்டு வந்தது. அப்போது அதை கடுமையாக எதிர்த்த பாரதியஜனதா, தற்போது மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் ஆதார் கட்டாயம் என்று கூறி வருகிறது.

தொடக்கத்தில், நாட்டில் நடைபெற்று வரும் குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆதார் தேவை என்று கூறிய மத்திய அரசு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற துறைகளுக்கும் விரிவு படுத்தியது.

தற்போது மத்திய அரசின்  சமூக நல திட்டங்கள் உள்பட  பல்வேறு அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல், ஆதார் தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுமாறு மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், பல்வேறு சமூக நல திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்குகளை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது.

ஆதார் தொடர்பான வழக்குகளை ஜூலை 18, 19 தேதிகளில் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.