வாஷிங்டன்: அடுத்தாண்டு ஜூலைக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்று அந்நாட்டின் நோய் தடுப்பு மையம் கூறி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் கிட்டத்தட்ட 72 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

கொரோனாவில் இருந்து மக்களை காக்க ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளன. அமெரிக்காவிலும் தடுப்பு மருந்து சோதனைகள் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது.

3 பிரபல நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் சோதனையில் உள்ளதாகவும், விரைவில் சட்ட அனுமதி கிடைத்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில், அடுத்தாண்டு ஜூலைக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்று அந்நாட்டின் நோய் தடுப்பு மையம் கூறி உள்ளது.

இது குறித்து நோய் தடுப்பு மைய தலைவர் ராபர்ட் ரெட்பீல்டு கூறி இருப்பதாவது: அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள்ளாக 7 கோடி தடுப்பூசிகள் கிடைத்துவிடும். இதை 35 கோடி மக்களுக்கு பயன்படுத்தலாம். ஜூலைக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்றார்.