வேலை நேரத்தை மீண்டும் மாற்றிய வங்கிகள்…

டெல்லி:

கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் காரணமாக,  அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மீண்டும் காலை 10 மணி முதல் 2 மணி வரை பழைய நிலைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி  முதல் 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வங்கிப் பணிகளின் நேரமும் குறைக்கப்பட்டது. அதன்படி,  வேலை நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வந்தது.

பின்னர் ஏப்ரல் 1ந்தேதி முதல், வங்கிகள் வழக்கம்போல காலை 10 மணி முதல் 4 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டு செய்யப்பட்டு வந்தது. தற்போது கொரானா பரவல் தீவிரம் காரணமாக ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  அனைத்து வங்கிகளும் மே 3ந்தேதி வரை  மீண்டும் காலை 10 மணி முதல், மதியம் 2 மணி வரையில் மட்டுமே இயங்கும் என அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  முதற்கட்ட ஊரடங்கின்போது வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வங்கிகளுக்கு வந்ததன் காரணமாக மாலை 4 மணி வரை வங்கிகள் செயல்பட்டு வந்தன.

ஊரடங்கு உத்தரவு தற்போது கடுமையாக பின்பற்றப்படுவதால் வாடிக்கையாளர்கள் நடமாட்டம் குறைந்துள்ளதோடு, 1 மணிக்கு முன்னதாகவே பெரும்பாலானோர் தங்களது வங்கிப் பணிகளை முடித்துக் கொள்வதாகவும், அதனால் இனிமேல் வங்கிகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவித்து உள்ளது.