கபாலி உட்பட பெரிய படங்கள் அனைத்தும் தோல்விதான்!: விநியோகஸ்தரின் அதிர்ச்சி ஆடியோ

 

ரஜினி நடித்த கபாலி படம் மாபெரும் வெற்றி என்று தயாரிப்பாளர் தாணு தரப்பு சொல்லிக்கொண்டிருக்க.. படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் நட்டம் நட்டம் என்று புலம்பிவருகிறார்கள்.  இப்போது இது குறித்து ஆடியோ ரிலீஸ் செய்துவிட்டார்கள்.

ஆம், திருப்பூர் விநியோகஸ்தர் சுப்பிரமணியன் இது குறித்து பகிரங்க ஆடியோவே வெளியிட்டிருக்கிறார்.

அந்த ஆடியோவில் அவர் பேசியிருப்பதாவது:

“கடந்த ஆறேழு மாத காலமாக.. உதாரணத்துக்கு கபாலியில் இருந்து.. காஷ்மோரா, கொடி, தொடரி, போகன், பைரவா, கத்திச்சண்டை, ரெமோ.. இப்போ ஓடிக்கிட்டுருக்கிற சிங்கம் 3.. அதாவது பெரிய நட்சத்திரங்கள் நடித்த இந்த படங்கள் எல்லாமே தோல்விதான். ஆனால் இவற்றை  மாபெரும் வெற்றி இமயம் வெற்றி.. என்று தயாரிப்பாளர்கள் பொய்யாக விளம்பரம் செய்கிறார்கள். .

மனசாட்சியோட விளம்பரம் கொடுக்கணும்.  பொதுமக்களை வேண்டுமானால் விளம்பரத்தில் ஏமாற்றலாம். ஆனால் திரைத்துரையில் இருப்போருக்கு தெரியும். இந்த இத்தனை படங்களில் ஒரு விநியோகஸ்தர்கூட சம்பாதிக்கலை என்பது தெரியும்.

படம் வெளியான இரண்டாவது நாளே நட்சத்திரவிடுதியில் வெற்றி விழா கொண்டாடுறீங்க..  இது நியாயமா?

ரெமோ கோவை, செங்கல்பட்டுல ஓரளவு லாபம். மத்தபடி நட்டம்.

அப்புறம் எப்படி வெற்றி விழா கொண்டாடுறீங்க?

அடுத்த எம்.ஜி.யார் தான்தான்னு பேசறீங்களே.. அவரைப்போல இருக்கீங்களா?

தேவர் பிலிம்ஸ்ல எம்.ஜி.ஆர். நடிச்சு முடிச்சவுடன்,  விநியோகஸ்தர், தியேட்டர்காரர்களுக்கு.. ஏன், தியேட்டர்கள்கள தட்டை முறுக்கு விக்கிறவனுக்கு கூட லாபமா, திருப்தியானு கேப்பாராம். திருப்தி இல்லேன்னா… உடனே அடுத்த கதையை ரெடி பண்ணச்சொல்லி நடிச்சி கொடுப்பாராம்.

அப்படி விநியோகஸ்தர்கள் பத்தியும் யோசித்ததால்தான் திரையுலகம் இயங்கியது.

ஆனா கடந்த பத்து வருட காலத்துல திரைத்துறை மரண படுக்கையில விழுந்ததுக்குக் காரணம் இந்த பெரிய நடிகர்கள்தான்.

தமிழகத்தில் ஏழு பகுதி விநியோகஸ்தர்களை, கேரளா, ஆந்திரா விநியோகஸ்தர்களை கூப்பிட்டு லாபமா, நட்டமானு கேட்கணும். கேட்டார்களா.

படம் வெளியான இரண்டாவது நாளே, டைரக்டரக்கு கார் பரிசாம். விநியோகஸ்தர்கள் காரை வித்துட்டு நிக்கிறார் சார்.

இன்னொரு விசயம். ஏழு பெரிய நடிகர்களுக்கு விநியோகஸ்தர்களான நாங்க ரெட் கார்டு போட்டதா சொல்றாங்க.

நாங்க யாருக்கும் ரெட் கார்டு போடலை.

அடுத்தடுத்த தங்களது படங்களை அந்த ஏழு நடிகர்களே நேரடியா வெளியிடட்டும். அப்போதுதான் அவர்களுக்கு உண்மை நிலை தெரியும் தாங்கள் வாங்கும் சம்பளம் நியாயம்தானா என்பது புரியும். அதற்காகத்தான் நாங்க ஒதுங்கி நிக்கிறோம்.

கபாலி வசூல் எவ்வளவு என்று ரஜினிக்கு தகவல் சொன்னாரா தயாரிப்பாளர் தாணு?

நடிகர்கள், தங்கள் படம் வாங்கின விநோயகஸ்தர்கள் இருக்காணா செத்தானா என்று பார்ப்பதில்லை. ஆனா நான் பிரதமரை பார்க்கப்போகிறேன்  என்றுஅறிக்கை விடுகிறார்கள்.அது அவர்களது விருப்பம். அதே நேரம், நான் எனது சேலம் விநியோகஸ்தரை சந்திக்கப்போறேன் என்று சொல்லுங்கள்.” என்று விளாசி தள்ளியிருக்கிறார் சுப்பிரமணியன்.