ஸ்ரீநகர்:

காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு  கொல்லப்பட்ட விவகாரம் காரணமாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 9 மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம்,  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில், தடயங்களை அழிக்க முயற்சித்ததாக 3 போலீசார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் மெகபூபா தலைமையிலான  ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. இதன் காரணமாக மாநில பாஜகவை சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பதவி வகித்து வந்தனர்.

இந்நிலையில் சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக அங்கு நடைபெற்ற பேரணியில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் பங்கேற்றனர். இது பிரச்சினையை மேலும் பூதாகரமாக்கியது. பாஜக தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

தற்போது நாடு முழுவதும் சிறுமியின் கொலை விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அது கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக  ஜம்மு – காஷ்மீர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து பா.ஜ.க. மந்திரிகளையும் உடனடியாக ராஜினாமா செய்யுமாறு பா.ஜ.க. மேலிடம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து,  அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த   9 மந்திரிகளும் ராஜினாமா செய்தனர்.. அவர்கள் மாநில பாரதிய ஜனதா தலைவர் சத் சர்மாவிடம் தங்கள் பதவி விலகல் கடிதங்களை கொடுத்துள்ளனர்.

பாஜக அமைச்சர்கள் பதவி விலகினாலும், கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி தொடரும் என கூறப்படுகிறது.