தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்ற உத்தரவு

மதுரை:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

தூத்துக்குடி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22ந்தேதி  நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர்  பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலரது கால்கள் துப்பாக்கி குண்டு காயம் காரணமாக அகற்றப்பட்டு உள்ளதாகவும கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதி மன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது என்றும், அதை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும், துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பது குறித்தும், சிபிஐ விசாரணை கோரியது உள்பட 16 வழக்குகள் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் விசாரிக் கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று சென்னை ஐகோர்ட்டில் இதுதொடர்பான வழக்கில், அரசு தலைமை வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி துப்பாக்கி சூடு  சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னைக்கு மாற்றவும், சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடமும்  கூறி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலை 2-ம் தேதி பிற்பகலில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.