சென்னை: நாளை முதல் அவசர வழக்குகள் மட்டுமல்லாமல் அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள நீதிமன்ற பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரை காணொலி காட்சி மூலம் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வந்தன.
வழக்கறிஞர்களின் வருமானம் பாதிக்கப்பட இதையடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து வழக்குகளையும் அனைத்து நீதிபதிகளும் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.
நீதிமன்றத்தைத திறந்து அனைத்து வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.
இந் நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் அனைத்து நீதிபதிகள் கூட்டம் நடந்தது. அதில், நாளை முதல் அவசர வழக்குகள் மட்டுமல்லாமல், எல்லா வகையான வழக்குகளையும், அனைத்து நீதிபதிகளும் காணொலி காட்சி மூலம் விசாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 2 நீதிபதிகள் கொண்ட 6 அமர்வுகள், 27 தனி நீதிபதிகள் ஆகியோர் என்னென்ன வழக்குகளை விசாரிப்பார்கள்? என்ற விவர பட்டியலை உயர்நீதிமன்ற பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.