சென்னை: இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்றுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் பிப்ரவரி 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டயப் படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும் 8.2.2021 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் பள்ளிகள் (9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் மட்டும்) 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இளங்கலை, முதுநிலை படிக்கும் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கும், 10 மற்றும் 12  வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.