திருப்பதி

ன்று முதல் அனைத்து பக்தர்களும் திருப்பதி கோவிலில் கட்டுப்பாட்டு விதிகளுடன் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன.   தற்போதைய ஊரடங்கு தளர்வில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.  அவ்வகையில் திருப்பதி கோவிலும் திறக்கப்பட்டுள்ளது.  இங்கு கடந்த மூன்று நாட்களாக முதலில் தேவஸ்தான ஊழியர்கள் பிறகு உள்ளூர் மக்கள் என சோதனை அடிப்படையில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இன்றுமுதல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   சமூக இடைவெளி காரணமாக ஒரு நாளைக்கு சுமார் 6500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   இதில் ரூ.300 கட்டண தரிசனத்துக்கு 3000 டோக்கன்களும் இலவச தரிசனத்துக்கு 3500 டோக்கன்களும் வழங்கப்படுகிறது.  இந்த டோக்கன்களை முதல் நாள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தரிசனத்துக்கான டோக்கன்கள் நேற்று அதிகாலை முதல் வழங்கப்பட்டன.   திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம், பூதேவி காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட 18 மையங்களில் ஆதார் அட்டை மூலம் இலவச தரிசன டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டதால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் டோக்கன்களை பெற்றுச் சென்றனர்.

இன்று காலை 6.30 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டுள்ளனர்.  இரவு 7.30 மணி வரை டோக்கன் உள்ள பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.   பல்வேறு ஊர்களில் இருந்தும் தரிசனத்துக்கு பக்தர்கள் வரலாம் என எதிர்பார்ப்பு உள்ளதால் தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.