சபரிமலைக்கு வரவேண்டாம்: கொரோனா பாதிப்பால் பக்தர்களுக்கு தேவசம் போர்டு வேண்டுகோள்

திருவனந்தபுரம்: கொரோனா பாதிப்பால் சபரிமலையில் வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ள மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.

கொரோனா வைரஸ் கடந்த ஜனவரி மாதம் முதல் சீனா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மட்டுமே பரவிய கொரோனா இப்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது.

இந்தியாவிலும் அதன் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. கேரளாவில் மட்டும் தற்போது 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்நிலையில் சபரிமலையில் வரும் 14 முதல் 18ம் தேதி வரை நடைபெறும் மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று தேவசம் போர்டு கோரிக்கை விடுத்து இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மாத பூஜை எப்போதும் போல் நடைபெறும் என்றும் தேவசம் போர்டு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, திருவிதாங்கூர் தேவசம் வாரியத் தலைவர் என் வாசு கூறியிருப்பதாவது: சபரிமலை கோவிலுக்கு வருவதைத் தவிர்க்குமாறு அனைத்து பக்தர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

மேலும், அனைத்து கோவில்களும் பொதுக்கூட்டங்களை உள்ளடக்கிய பண்டிகைகளை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கோரி இருக்கிறார்.