நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ம் தேதி வரை மூட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனாவால் இதுவரை 6000க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்கான அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் வெளியிட்டுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை மிக குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்.

நெருக்கமாக நின்று பேசுவதை தவிர்த்து, குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.