சென்னை: வங்கி ஊழியர்களின் கோரிக்கை சம்பந்தமாக நேற்று டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது.
வங்கிகளை தனியார் மயமாக்குதல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு போன்ற மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், நிலுவையில் உள்ள 13 லட்சம் கோடி வாராக்கடனை வசூலிக்க வேண்டியும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தது.
bank-strike
அகில இந்திய வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தடுக்கும் பொருட்டு  மத்திய தொழிலாளர் நல ஆணையர் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.  டெல்லியில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வங்கியின் தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள், வங்கி நிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எடுக்க முடியவில்லை. இதனால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக  வரும் 12, 13 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து உள்ளனர்.
போராட்டம் குறித்து வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எச்.வெங்கடாச்சலம்:

  • ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்க ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
  • இந்த விவகாரத்தில் துணைவங்கி ஊழியர்களுக்கு சரியான பதில் அளிக்க நிர்வாகம் முன்வரவில்லை.
  • ஐடிபிஐ வங்கியை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.
  • பெரும் முதலாளிகளின் வாராக்கடன்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து வசூலிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைள் பற்றி பேசினோம்.ஆனால் அரசாங்கமோ, வங்கி நிர்வாகமோ இதை ஏற்றுக்கொள்ளவில்லை. புதிய பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் புதிய பகுதியாக இந்த திட்டங்கள் தொடரும் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டனர்.

எந்தவொரு கோரிக்கைக்கும் நிர்வாகம் சம்மதிக்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
எனவே வருகிற 12, 13-ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும். இந்த வேலைநிறுத்தத்தில்  ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளின் பணியாளர்கள் சுமார் 45 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர். அடுத்த நாளான 13-ம் தேதி அனைத்து வங்கி பணியாளர் பங்குபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.