சென்னை:

த்துமீறி அராஜகமாக செயல்பட்டு வரும் கரூர் தேர்தல் அதிகாரி அன்பழகன் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்ற நிலை யில், கரூரில்  காங்கிரஸ் வேட்பாளருக்கும், அ.தி.மு.க., வேட்பாளருக்கும் கரூர் ரவுண்டா பகுதியில் ஒரே நேரத்தில் அனுமதி கேட்டிருந்தனர்.  இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்,  ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்த னர். அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரை ஆன்லைன் மூலமாகவும், மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு அனுமதி அளிக்கப்பட்டது, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கரூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி, தி.மு.க., கட்சியின் மாவட்ட பொருப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அப்போது சம்பவ இடத்துக்கு தேர்தல் பார்வையாளர்கள்  பிரசாந் குமார், மனோஜ் குமார் ஆகியோர் விசாரனை நடத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு பிரச்சாரம் செய்ய கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவுண்டாவில் அனுமதி அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக நேற்று இரவு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகனிடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேட்டி அளிக்கும் போது திட்டமிட்டபடி பிரச்சாரம் நடைபெறும் என்றார்.

இந்த நிலையில், கரூர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் செந்தில் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கட்சியினர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் குடியிருப்பு  பகுதியில் நுழைந்து கலெக்டர் அன்பழகனுக்கு மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து  கலெக்டர் நேரடியாக காவல்துறையினரிடம் புகார் கொடுத்த நிலையில், செய்தியாளர்களிடமும் எடுத்துரைத்தார்.

இதற்கிடையில், கலெக்டர் அன்பழகன், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், தேர்தலை ரத்து செய்து விடுவேன் என்று மிரட்டி  ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்தல் அதிகாரி உள்நோக்கத்துடன் புகார் அளித்து இருப்பதாகவும்  அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் டில்லியில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.