சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி லாரிகள் வேலை நிறுத்தம்

நாமக்கல்

நாடெங்கும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகளுக்காக லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளன.

அனைத்திந்திய லாரி உரிமையாளர் சங்கத்தினர் அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்தனர்.  அதில், “நாடெங்கும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும்.  அத்துடன் அனைத்து லாரிகளும் இணைந்து  வருடத்துக்கு ஒருமுறை அளிக்க உள்ள ரூ.18000 கோடி சுங்க கட்டணத்தை பெற்று கொள்ள வேண்டும்.  பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை 3 மாதத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.   இவைகளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.   மூன்றாம் நபர் காப்பீடு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்” என கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு  அரசு செவி சாய்க்காததால் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்தது.   அதன் படி இன்று முதல் வேலை நிறுத்தம் தொடங்க உள்ளது.   இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 4.5 லட்சம் லாரிகள் கலந்துக் கொள்ள உள்ளன  என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.   நேற்று முதலே சென்னையில் மணலி, மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் லாரிகள் அந்தந்த மையங்களில் நிறுத்தப் பட்டு விட்டன.   இதனால் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வருகை தடை அட்டுள்ளது.

சென்னையின் மிகப் பெரிய காய்கறி சந்தையான கோயம்பேட்டுக்கு நேற்று முதலே காய்கறி வரத்து நின்று விட்டதால் நகரெங்கும் காய்கறி விலை உயர்ந்துள்ளது.   இதே நிலை மற்ற பொருட்களுக்கும்  பரவி விலைவாசி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.   மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் மினி லாரிகளும் பங்கேற்பதாக அறிவித்துள்ளதால் அத்தியாவசியப் பண்டங்கள் போக்குவரத்து முழுமையாக நின்று போகும் நிலை உண்டாக உள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.200 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.   சுமார் 1 கோடி பணியாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கபடுவார்கள்.