அனைத்து மொழிகளும் முக்கியம்: இந்திக்கு ஆதரவாக விஜயகாந்த் மகன் அணிந்த தேமுதிக டி.சார்ட் வைரல்….

சென்னை: அன்னை மொழியும் முக்கியம், அனைத்து மொழிகளும் முக்கியம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டு உள்ள டி.சர்ட்டை  விஜயகாந்த் மகன் அணிந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை, நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் , திமுக, அதிமுக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், தேமுதிக, நீட் தேர்வு வேண்டும் என்றும், இந்தி தேவை என்றும் ஆதரவு தெரிவித்துவருகிறது.

இந்த நிலையில், கடந்த 14ந்தேதி அன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின்  16-ஆம் ஆண்டு கட்சி துவக்க நாள், கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் கட்சி கொடி ஏற்றினார். அதைத்தொடர்ந்து, ஏராளமானோர்  தேமுதிகவில் தங்களை இணைத்துக்கொண்டு கழக உறுப்பினர் அட்டை பெற்றனர்.

அப்போது கட்சியில் இணைந்த இளைஞர்கள் அனைவரும் மஞ்சள் கலரிலான டி-சர்ட் அணிந்தி ருந்தனர்.  அதன் முன்பகுதியில், விஜயகாந்த் படத்துடன், அன்னை மொழியும் முக்கியம், அனைத்து மொழியும் முக்கியம் என்றும், பின்பகுதியில்,  ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த டிசர்ட் அணிந்து விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமீபத்தில், இந்திக்கு எதிராக, தமிழகத்தில், திரையுலகினர் மற்றும் திமுகவினர்  அணிந்த டீசர்ட் வைரலாகி பரபரபபை ஏற்படுத்தியது.  இந்த விவகாரத்துக்கு பின்னணியில் திமுக இருப்பதாகவும் திமுக நிர்வாகி ஒருவரின் பனியன் நிறுவனத்தில் தான் டீசர்ட்டுகள் உருவாக்கப்படதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் திடீரென விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இந்தி மொழிக்கு ஆதரவாக, அனைத்து மொழிகளும் முக்கியம் என  டிசர்ட் அணிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.