சென்னை

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்ததையொட்டி அனைத்து மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்களையும் சோதிக்க கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவரின் மகன் உதித் சூர்யா தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் சேர்ந்தார்.    உதய் சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.   இதையொட்டி உதித் சூர்யா மற்றும் அவருக்காகத் தேர்வு எழுதிய மாணவர் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டது.

உதித் சூர்யா ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாததால் அவர் தனது தந்தையுடன் சேர்ந்து இந்த திட்டம் தீட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.   தற்போது உதித் சூர்யா எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் உள்ளதால் காவல்துறையினர் அவரை தேடி  வருகின்றனர்.   உதித் சூர்யாவுக்காகத் தேர்வு எழுதிய மாணவரும் தற்போது காணவில்லை என்பதால் அவரும் தேடப்பட்டு வருகிறார்.

உதித் சூர்யாவின் நீட் தேர்வு ஹால் டிக்கட்டில் உள்ள புகைப்படத்தைக் கொண்டு தேர்வு எழுதிய அதே நபர் கலந்தாய்விலும் பங்கு பெற்றது தெரிய வந்துள்ளது.    இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, “தேர்வு எழுதி கலந்தாய்வில் பங்கு பெற்றவருக்கு பதிலாக வேறு ஒருவர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.   இது போல ஆள்  மாறாட்டம் நடைபெறுவதைத் தடுக்கவே நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இது போல வேறு சிலரும் ஆள் மாறாட்டம் செய்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.   எனவே அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் அனைத்துச் சான்றிதழ் மற்றும்  கலந்தாய்வு குறித்த விவரங்களைச் சோதனை இட கல்லூரிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.   இந்த சோதனையின் மூலம் வேறு யாராவது இது போல் ஆள்மாறாட்டம் செய்திருந்தால் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.