நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் எம்பிக்களுக்கு கொரோனா பரிசோதனை: சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து எம்பிக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று சபாநாயகர் ஓம்.பிர்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாத இறுதியில் தொடங்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக குறித்த நேரத்தில் தொடங்கவில்லை. ஆனாலும், மழைக்கால தொடரை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி வரும் 14ம் தேதி முதல் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா சூழலில் அவை நடவடிக்கைகளின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில், கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து எம்பிக்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மொபைல் செயலி வழியாக வருகை பதிவு செய்யப்படும் என்றும் இரு அவைகளும் தொடர்ச்சியாக செயல்படும் என்றும் கூறினார்.