பாட்னா:

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று ஒரே நாளில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இதனால் அங்கே  பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் உத்தரபிரதேசத்தில்  இறுதிக் கட்டத் தேர்தல் வரும் 8-ம் தேதி நடக்கிறது.  பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியும் இதில் அடக்கம்.        

தேர்தலை முன்னிட்டு வாரணாசியில் பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் முகாமிட்டுள்ளனர். வாரணாசி வந்துள்ள பிரதமர் மோடி, வாகன பேரணி  நடத்தினார். அதே போல சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுலும் தங்கள் கட்சியின் சார்பில் வாரணாசியில் பேரணி நடத்த இருக்கின்றனர்.

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிர்தி இராணி உள்ளிட்ட அமைச்சர்களும் வாரணாசியில் முகாமிட்டுள்ளனர்.

இதனால் வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.