இலங்கை: அனைத்துக்கட்சிக் கூட்டம் தோல்வி

லங்கையில் நிலவும்  அரசியல் குழப்பங்களை தீர்க்கும் நோக்கத்தோடு அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது.

இலங்கை பிரதமர் அதிபர் சிறிசேன, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை அக்டோபர் 26-ம் தேதி புதிய பிரதமராக நியமித்தார். ராஜபக்ச பிரதமராக பதவியேற்றதில் இருந்து அங்கு பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, அதிபர் சிறிசேன, கடந்த நவம்பர் 9 ஆம் தேதி அதிரடியாக நாடாளுமன்றத்தை கலைத்து   உத்தரவிட்டார். மேலும், ஜனவரி 5 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. விசாரணை முடிவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் சிறிசேன அறிவித்த உத்தரவுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. பிறகு    நாடாளுமன்றத்தில் நவம்பர் 14ம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. வாக்கெடுப்பில் ராஜபக்ச அரசு தோல்வி அடைந்ததாக சபநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.  ஆனால், இதனை ஏற்க அதிபர் சிறிசேன மறுத்துவிட்டார். தான் நியமித்த பிரதமரை நீக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க தரப்பினருக்கு இடையே  மோதல் ஏற்பட்டது. உறுப்பினர்கள்ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த அமளிக்கு  நடுவே கத்தியுடன் நாடாளுமன்றத்தில் வலம் வந்த ஒரு எம்.பி. கைது செய்யப்பட்டார். மேலும் நாடாளுமன்றத்தில் ராஜபக்ச ஆதரவு எம்.பிக்கள் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது மிளகாய்ப் பொடியை வீசினர்.  அதேபோல், தடுக்க வந்த காவலர்கள்  மீது தண்ணீரில் கரைத்த மிளகாய்ப் பொடி கலைவையை எறிந்தனர்.  இந்த சம்பவங்கள் இலங்கை அரசியலில் பெரும் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்நிலையில்   அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண அதிபர் மைத்ரிபால சிறிசேன அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டினார். தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அதிபரின் நிலைப்பாட்டையும் முடிவையும் ஏற்க முக்கிய கட்சிகள் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  மேலும் நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்கு அதிபரே காரணம் என்றும் அதற்கு அவர் தான் முடிவு கட்ட வேண்டும் என்றும் எம்பிக்கள் கடுமையாக விமர்சித்ததாக  கூறப்படுகிறது.  எம்பிக்களின் கேள்விகளுக்கு அதிபர் சிறிசேன முறையான பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆகவே  அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.