காவிரி விவகாரம்: முதல்வர் குமாரசாமி தலைமையில் இன்றுமாலை அனைத்துக்கட்சி கூட்டம்

பெங்களூரு:

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

காவிரி பிரச்சனை தொடர்பாக உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து, காவிரி ஒழுங்காற்று குழுவையும் அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடகா, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகா சார்பில் அதிகாரிகள் நியமிப்பதை காலம் தாழ்த்தி வந்தார்.

இதன் காரணமாக, கர்நாடக அரசின் உத்தரவின்றி, மத்திய அரசே நேரடியாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் பங்குபெறும்  உறுப்பினர் பட்டியலை அறிவித்து அறிவிப்பு வெளி யிட்டது. அதன்படி,  காவிரி ஆணையத்தில்  கர்நாடக அரசின் நீர்வளத்துறை நிர்வாகச் செயலரும், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளரும் இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி,  ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும், இந்த  விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்துவோம் என்று ம், காவிரி ஆணையத்தில் உள்ள சில சிக்கல்களுக்கு தீர்வுகாண வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டிருந்த நிலையில், மத்திய அரசே  காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக பிரதிநிதியை நியமித்ததற்கு கடும் கண்டனமும் தெரிவிப்பதாக கூறினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக பெங்களூரில் இன்று மாலை அனைத்துக்கட்சி  ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் குமாரசாமி கூட்டியுள்ளார்.

இதற்கிடையில், கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்டு வந்த நீரை கர்நாடகா நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.