அனைத்து கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு இன்று ஆலோசனை..

சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை  நடத்துகிறார்.

தமிழகத்தில் வருகிற 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதையடுத்து,  நவம்பர் 16ம் தேதியில் இருந்து டிசம்பர் 15ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து, ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் வழக்கமாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு அரசியல் கட்சியினரின் கருத்துக்கள் கேட்கப்படும்.
அந்த வகையில் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தின் 2வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், இரட்டை பெயர் பதிவுகள் நீக்கம், வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். கூட்டத்திற்கு பின்பு வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பது நீக்குவது தொடர்பாக சிறப்பு முகாம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பும் உள்ளது.

இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.