சென்ன‍ை: ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் வழங்குவது தொடர்பாக பள்ளி ஆவணங்களில் தவறாமல் பதிவுசெய்ய வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது பள்ளிகள் தொடர் விடுமுறையில் உள்ளன. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணாக்கர்ளுக்கு ஏப்ரலில் நடக்கவிருந்த மூன்றாம் பருவ(இறுதி) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு தேர்வுகள் இல்லாமல், அனைவருக்கும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த மாணாக்கர்கள் அனைவரும், தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதுகுறித்து மொபைல் போன் மற்றும் மின்னஞ்சல் வழியாக உரிய வழிகாட்டல் வழங்க வேண்டும்.

பள்ளிகள் திறந்தபின், மாணாக்கர்களின் பெயர்களை தேர்ச்சிப் பதிவேட்டில் பதிவு செய்து உரியப் பதிவுகளை மேற்கொண்டு, மாணாக்கர்களின் தேர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.