சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘அனைவருக்கும் தேர்ச்சி’ திட்டமெல்லாம் இல்லை. தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகும் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லாத மாவட்டங்களில் மட்டும் தேர்வு நடத்தப்படும் என்றெல்லாம் வதந்திகள் பரவி வந்தன. ஆனால், இதுகுறித்து முதலமைச்சர்தான் இறுதி முடிவு செய்வார் என்று தெரிவித்தார் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய முதல்வர், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணாக்கர்கள் எந்தக் குழப்பமும் அடைய வேண்டாம். தேர்வை எப்போது நடத்துவது என்பதை பல்வேறு வகைகளில் பரிசீலித்து வருகிறோம். ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டதைப்போல 10ம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடியாது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சியானது, அரசின் அனைத்து வகை பணிகளுக்கும் அடிப்படைக் கல்வியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாணாக்கருக்கும் அடுத்த நிலையிலான படிப்புக்கு செல்வதற்கான முக்கிய படிப்பாக உள்ளது. எனவே, எந்த மாணவர் எப்படி படிக்கிறார்? என்பதைத் தெரிந்து கொள்ள 10ம் வகுப்பு தேர்வு அவசியம். தேர்வு குறித்து உரிய நேரத்தில் அரசு அறிவிக்கும்” என்றார்.