சென்னையில் அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி…

--

சென்னை:

மிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் வரும் 11ந்தேதி முதல்  டீ கடைகள் திறப்பு உள்பட பல்வேறு தளர்வுகளை தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

அதன்படி, சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  காலை 10.30 மணி முதல் இரவு 6 மணி வரை இயங்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 24.3.2020 முதல் அமலில் இருந்து வருகின்றது.

கடந்த 2.5.2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படை யிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிடிநநாட்டின் பிற மாவட்டங்களில்
பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் (நோய்க் கட்டுப்பாட்டுபகுதிகள் தவிர) கீழ்க்காணும் பணிகள், 11.5.2020 திங்கள்கிழமை முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி
வரை செயல்படும்.

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள
அனைத்து பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.

அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதையும், போதுமான கிருமி நாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக
பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை  தீவிரமாக கடைபிடிப்பதையும், கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையாளர்களும், காவல் துறையினரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.