டெல்லி: டெல்லியில் நாளை முதல் வழிபாட்டு தலங்கள், உணவு விடுதிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. ஆனாலும் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது.

இந் நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தலைநகர் டெல்லியில் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்கள், உணவு விடுதிகள் திறக்கப்படும். ஆனால் ஓட்டல்கள், விருந்து அரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். அதே போன்று டெல்லி மாநில எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும்.

ஜூன் இறுதிக்குள் டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக 15 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும். இனி டெல்லியில் உள்ள மருத்துவமனைகள், டெல்லி வாழ் மக்களுக்காக மட்டுமே செயல்படும்.  மத்திய அரசின் மருத்துவமனைகள்  அனைவருக்காகவும் தொடர்ந்து செயல்படும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியோர்கள், உங்களது வீட்டில் தனியறையில் இருங்கள்.  ஏனெனில் கொரோனா வைரஸ் முதியோர்களை பாதிக்கும் ஆபத்து அதிகம் என்று கூறியுள்ளார்.