சிவகங்கை:

துரையை தொடர்ந்து  சிவகங்கையிலும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலரிடம்  அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஆனால் ஏப்ரல்18ந் தேதி மதுரையில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் புகழ்பெற்ற சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. மேலும், அன்றைய தினம் புனித வியாழன். இந்த தினத்தை கிறிஸ்தவர்கள் நோன்பு கொண்டாடுவார்கள்… மேலும் பல மாவட்டங்களில் அன்றைய தினம் கோவில் திருவிழாக்கள் நடைபெற உள்ளது. மேலும், அடுத்த நாளான 19ந்தேதி சித்ரா பவுர்ணமி. அன்றைய தினமும் திருவண்ணாமலை உள்பட பல மாவட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சிவகங்கையில் அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவரும்,  தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்ற  ஆலோசனை கூட்டத்தில்,  மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன், வருவாய் அலுவலர் லதா, உதவி தேர்தல் அலுவலர்கள் திருவாசகம், ஈஸ்வரி, செல்வக்குமாரி உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில்,  அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.  பாஜக சார்பில் தனசேரகன், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பெரேஸ்காந்தி, திமுக சார்பில் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

அப்போது, மதுரை சித்திரை திருவிழாவைப்போல, மானாமதுரையிலும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் திருப்புவனம், நாட்டரசன்கோட்டை பகுதிகளிலும் விழாக்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஏப். 18-ந்தேதி, பொது மக்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும் என்றும், அன்றைய தினம்,  இளையான்குடி பகுதியில் 43 கிராமமக்கள் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க மதுரை சென்று விடுவர். இதன் காரணமாக அவர்கள் வாக்களிப்பது இயலாத காரியம்…  ஆகவே தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.