அனைத்து திரையரங்குகளிலும் நவம்பர் 6ந்தேதிக்குள் சிசிடிவி: தயாரிப்பாளர்கள் சங்கம் கெடு

சென்னை:

மிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திருட்டு வீடியோவை ஒழிக்கும் வகையில் நவம்பர் 6ந்தேதிக்குள் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கெடு விதித்து உள்ளது.

தமிழக திரையரங்குகளில் இருந்து புதிய படங்கள் திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டு வலை தளங்கள் மூலம் பகிரப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தியேட்டர்களில் வசூல் குறைந்து வருகிறது. படத்தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.  இதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், திருட்டுத்தனமாக படங்கள் பதிவு செய்யப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது.

இதை தடுக்கும் வகையில் அனைத்து தியேட்டர்களிலும் சிசிடிவி காமிரா பொருத்த தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் திருட்டு வீடியோ பைரசியை ஒழிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உள்/வெளி அரங்குகள், வாசல்கள், பார்க்கிங் பகுதிகளில் சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும். அது வருகிற நவம்பர் 6 தீபாவளி தினத்திற்குள் பொருத்தபட வேண்டும்.

2. பொருத்தபட்ட காமிராக்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பதிவு  செய்யபட வேண்டும்.

3. நவம்பர் 15ந்தேதிக்குள் காமிராக்கள் பொருத்தாக திரையரங்குகளுக்கு படம் திரையிட தரப்பட மாட்டாது.

4.  இனி அனைத்து காட்சிகளிலும் 2 நபர்களை திரையரங்குக்குள் முழு நேர கண்காணிப்பு பணிக்கு அமர்த்தபடுவர்.

5. ஒவ்வொரு முறையும் திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும்.

6. திரைப்படத்தினை காண வரும் பொது மக்களிடம் காமிரா இருக்கிறதா என்று கட்டாயமாக பரிசோதனை செய்யப்படும்

7. தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழு ஒன்று அமைக்கப்படும்.  மேற்படி விஷயம் குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்படுமாயின் அதனை அந்த குழுவில் வைத்து ஆலோசித்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் திருட்டு வீடியோவை ஒழிக்க இந்த குழு கடுமையாக போராடும்.

இவ்வாறு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.