லகாபாத்

த்தரப்பிரதேச அரசு கொரோனா அதிகரிப்பைச் சரிவர கட்டுப்படுத்தாதற்கும் சரியான சிகிச்சை அளிக்காததற்கும் அலகாபாத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்திலும் உத்தரப்பிரதேச மாநிலம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.   இங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.   உத்தரப்பிரதேச முதல்வரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநில அரசு கொரோனா அதிகரிப்பைத் தடுக்க சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் 5 முக்கிய நகரங்களான, லக்னோ, கான்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ், மற்றும் கோரக்பூர் ஆகிய மாநிலங்களில் வரும் 26 ஆம் தேதி வரை முழு ஊரடங்குக்கு உத்தரவு இட்டது.

மேலும் உயர்நீதிமன்றம், உத்தரப்பிரதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   நீதிமன்ற உத்தரவில், “எந்த ஒரு நாகரீகம் அடைந்த மாநிலத்திலும் மக்களுக்குச் சுகாதார வசதிகள் இந்த கடுமையான நேரத்தில் கிடைக்காமல் மருத்துவ தேவையால் உயிர் இழந்தால் அங்கு சரியான முன்னேற்றம் இல்லை எனப் பொருளாகும்.

இது மாதிரியான மோசமான சுகாதார சூழலின் போது அரசு தனது ஜனநாயக பொறுப்பைச் சரிவர நிறைவேற்றாமல் உள்ளது.   ஜனநாயக அரசு என்பது மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு நடைபெறும் அரசு என்பதை நாம் மறக்கக் கூடாது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிக முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு இருந்தால் மட்டுமே உரிய சிகிச்சை கிடைக்கிறது.

ஆனால் ஒரு ஜனநாயக அரசில் அதுவும் இந்த 21 ஆம் நூற்றாண்டு நவீன யுகத்தில் இது போல மக்கள் தேவையான மருத்துவ வசதி இன்றி மடிவது  அரசு இந்த கொள்ளை நோய் பரவும் கால கட்டத்தில் சரி வர தனது கடமையைச் செய்யவில்லை என்பதே பொருளாகும்.   கடந்த ஒரு வருடமாக இந்த நிலை நீடித்தும் அரசு இதில் எந்த பாடமும் கற்றுக் கொள்ளாமல் உள்ளது.

உலக மக்கள் நமது நாட்டில் தேர்தலுக்குச் செலவு செய்யப் பணம் உள்ளது,  ஆனால் மக்கள் மருத்துவச் செலவுக்குப் பணம் இல்லை எனக் கூறும் போது நிச்சயம் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.