டில்லி:

குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற  போலி என்கவுண்டர் தொடர்பான விசாரணை அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

குஜராத் மாநிலத்தின்  முதல்வராக மோடியும், உள்துறை அமைச்சராக அமித்ஷாவும்  இருந்த போது நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு கலவரம் தொடர்பாக பலர் என்கவுண்டர் செய்யப்பட்ட னர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த  2002 ம் ஆண்டு  கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடந்து  குஜராத்தில் வரலாறு காணாத அளவில் வன்முறை  வெறியாட்டம் நடந்தது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த வன்முறை வெறியாட்டத்தில் 22 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என கூறப்பட்டது. ஆனால், இஸ்லாமிய மதத்தினரை வேண்டுமென்றே காவல்துறை அதிகாரிகள் என்கவுண்டர் செய்யதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. போலி என்கவுண்டர் தொடர்பாக 36 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் போலி என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பி.ஜி. வர்கீஸ், கவிஞர் ஜாவித் அக்தர் ஆகியோர்  உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2007-ம் ஆண்டு பொதுநலன் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்திலும் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு முதல் 2006 வரை நடந்த போலி என்கவுண்டர்கள் பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி எச்.எஸ்.பேடி தலைமையில் ஒரு குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்திருந்தது.

என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள்

இதற்கிடையில்  மனுதாரர்களில் ஒருவரான வர்கீஸ் கடந்த 2014-ம் ஆண்டு இறந்து விட்டார். இந்தநிலையில் விசாரணையை முடித்து, ஓய்வு பெற்ற நீதிபதி எச்.எஸ். பேடி அறிக்கை நீதிமன்றத்தில் கடந்த 2018ம் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பபட்டது.

அதைத்தொடர்ந்த பேடியின் அறிக்கை   குறித்து பதில் மனு தாக்கல் செய்ய குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 3ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், கே.எம். ஜோஸப் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

இந்த வழக்கில்  மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும், நித்யா ராமகிருஷ்ணனும் ஆஜராகினார்கள். குஜராத் அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.

விசாரணையின்போது,   இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து வாதாடிய  பிரசாந்த் பூஷன், நித்யா ராமகிருஷ்ணன் ஆகியோர் நீதிபதி பேடியின்  விசாரணை அறிக்கையின் நகல் தங்களுக்கு தர வேண்டும் என நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், குஜராத் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பேடியின் அறிக்கையை உடனடியாக யாருக்கும் பகிரக்கூடாது, சில பொறுப்புகள் இருக்கிறது என்று கூறி தங்களின் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அனுமதி கோரினார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி எச்.எஸ்பேடியின் அறிக்கையை மனுதாரர்கள் வி.ஜி வர்கீஸ் மற்றும் ஜாவத்அக்தர் வழங்கும்படி குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.