மும்பை: சிவசேனா அரசுடன் கூட்டணியில் இணைய வேண்டாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்களாகியும் யார் அரியணை ஏறுவார்கள் என்பது பரபரப்பு திருப்பமாகி வருகிறது. அதிக தொகுதிகளை வென்று, கூட்டணி கட்சியான சிவசேனாவின் பிடிவாதத்தால் தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சியமைக்க முடியவில்லை.

அதற்கு அடுத்த இடத்தில் உள்ள சிவசேனாவை ஆட்சியழைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து இருக்கிறார். இதையடுத்து, மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்  ஆதரவுடன் அரசு அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என்று தெரிகிறது. இந்த அரசுக்கு காங்கிரஸ் கட்சி, வெளியில் இருந்து ஆதரிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

இதுபோன்ற அரசு அமைந்தால் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை மீது கேள்வி எழும். சிவசேனா, தேசியவாத காங்கிரசுடன், காங்கிரஸ் கை கோர்த்தால், அது பேரழிவாகும்.

யார், எப்படி ஆட்சியமைக்க போகிறார்கள் என்பது இப்போது பிரச்னை அல்ல. யார் ஆட்சியமைத்தாலும் மகாராஷ்டிராவில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படப்போவது  இல்லை என்பது உறுதி.

மீண்டும் ஒரு சட்டசபை தேர்தலுக்கு தயாராக இருங்கள். 2020ம் ஆண்டில் தேர்தல் நடக்கும். சிவசேனாவை கூட்டணியில் இணைத்துக் கொண்டு, அந்த தேர்தலை எதிர்கொள்வோமா?

இப்போது உள்ள அரசியல் கணக்கீட்டின்படி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து அரசமைக்க முடியாது. அதற்காக சிவசேனா தேவை. ஆனால், எந்த சூழ்நிலையில் சிவசேனாவுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது பற்றி சிந்திக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது கட்சியை அழித்துவிடும் என்றார்.