கூட்டணி சர்ச்சை: மு.க.ஸ்டாலின் – திருமாவளவன் சந்திப்பு

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறதா என்கிற சர்ச்சை கிளம்பியுள்ளந நிலையில் சற்றுமுன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  சந்தித்தார்.

தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், “திமுகவுடன் தற்போது இருப்பவர்கள் அனைவரும் நண்பர்கள் தான்.   கூட்டணி கட்சிகள் அல்ல. ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எங்களது கூட்டணியில் இல்லை” என்று தெரிவித்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. “திமுக கூட்டணியில் மதிமுகவும் விடுதலை சிறுத்தைகளும் இருக்கிறதா என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்”  என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  கூறியிருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “திமுக உடனான உறவு தொடர்கிறது. இது கூட்டணியாக மாற விரும்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

வைகோ மற்றும் திருமாவளவன் கருத்து குறித்து மு.க. ஸ்டாலின் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சற்றுமுன் சந்தித்து பேசினார்.

அவர்கள் சந்திப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் மூலம் கூட்டணி சர்ச்சை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.