மெரினா சாலைமறியலின்போது ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கைது

--

சென்னை:

சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன்,வீரமணி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அங்கிருந்து பேரணியாக மெரினா கடற்கரை வந்தனர்.

போலீசார் தடுப்புகளையும் மீறி ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த பேரணி மெரினா கடற்கரையை சென்றடைந்தது.

அங்கு கடற்கரை சாலையில் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள்  உழைப்பாளர் சிலை அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் திமுக உள்பட கூட்டணி கட்சி தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற காட்சி அளித்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை கலைந்துசெல்லும்படி போலீசார் வலியுறுத்தினர்.

ஆனால்,  அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், ஸ்டாலினை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். அதைத்தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. ஸ்டாலினை கைது செய்து அழைத்து செல்ல இருந்த வாகனத்தை தொண்டர்கள் சுற்றி நின்று மறித்து வருகின்றனர்.

இதன் காரணமாக போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது.

You may have missed