சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்காக இரண்டு நாட்கள் ஒதுக்கலாம்: நீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்

சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்காக மட்டும் இரண்டு நாட்களை ஒதுக்கலாம் என கேரள உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு  தெரிவித்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து  உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு இந்து அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

தற்போது மகரவிளக்கு–மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு போராட்டங்களை தடுப்பதற்கு கேரள  காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.  மேலும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இந்த நிலையில், “சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் பெண்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.   நாங்கள் இருமுடி அணிந்து சபரிமலை கோயிலுக்குச் செல்வோம். எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று நான்கு பெண்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்ற கேரள மாநில அரசு ஒரு பரிந்துரையை தாக்கல் செய்துள்ளது. அதில், “சபரிமலை கோவிலில் பெண்களுக்கு என்று பிரத்யேகமாக இருநாட்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், தேவசம் போர்டு உடன் ஆலோசனையை மேற்கொண்டு எந்த நாட்களில் அனுமதிக்கலாம் என்ற தேதியை முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக சபரிமலை கோவில் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சிகள் கூட்டத்தின்போதும் இதே ஆலோசனையை கேரள அரசு முன்வைத்தது.  ஆனால் பிறக்கட்சிகள் இதனை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

# allocate #two #days #women #sabarimala #kerala #government