அறுவை சிகிச்சையும் ஆயுர்வேத மருத்துவர்களும் : மத்திய அரசுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு

கோயம்புத்தூர்

இனி ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்னும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புக்கள் அதிகரித்து வருகின்றன.

இதுவரை அறுவை சிகிச்சை அலோபதி எனப்படும் நவீன ஆங்கில முறை மருத்துவரால் மட்டுமே செய்யப்பட்டு வந்தது.  ஆனால் மத்திய அரசு சமீபத்தில் ஆயுர்வேத மருத்துவர்களும் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் எனவும் அதற்குத் தேவையான எம் எஸ் பட்டம் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தது.   மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குப் பல மாநிலங்களைச் சேர்ந்த அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளையும் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  தமிழக கிளை தலைவர் ராஜா மற்றும் ரவிக்குமார், “”அலோபதி என்ற நவீன ஆங்கில முறை மருத்துவரால் மட்டும் செய்யக்கூடிய பல்வேறு அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் எனவும், அவர்களுக்கும் அதற்கான எம்.எஸ்., பட்டம் வழங்கப்படும் என ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு ஒரு மருத்துவ முறையோடு, இன்னொரு மருத்துவ முறை கலப்பதை இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை எதிர்க்கிறது. மத்திய அரசின் அறிவிப்பின்படி ஆயுர்வேத மருத்துவரும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றால் மயக்க மருந்தும், அதற்கான செயல் முறைகளும் ஆயுர்வேதத்தில் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே, ஆயுர்வேத மருத்துவர்கள், நவீன அலோபதி மருத்துவர்களின் துணையின்றி எந்த ஒரு அறுவை சிகிச்சையையும் செய்ய இயலாது என்பது புலனாகும். நமது பாரம்பரியம் என எதையாவது தவறாகப் புரிந்து வைத்திருப்பதன் விளைவுதான் இது போன்ற அறிவிப்புகளாகும்.

நாங்கள் நவீன மருத்துவ தடுப்பூசி மூலம் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தி வருகிறோம்  தற்போது காசநோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.  இந்திய மருத்துவர்கள் உலகத்தரம் வாய்ந்த மருத்துவத்தை மக்களுக்கு அறிவிப்பதில் இந்தியா முன்னிலை வகிக்கின்றனர்.  மிக நீண்ட காலம் பாடுபட்டு கட்டியெழுப்பியுள்ள மருத்துவத்துறையின் உன்னதத்தைப் பாதுகாக்கும் கடமை இந்திய மருத்துவ சங்கத்துக்கு உள்ளது” எனக் கூட்டு  அறிக்கை விடுத்துள்ளனர்.