பள்ளிகளே திறக்கப்படாதபோது திரையரங்கில் 100% இருக்கை அனுமதிப்பதா? சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் இன்னும் பள்ளிகளே திறக்கப்படாதபோது திரையரங்கில் 100% இருக்கை அனுமதிப்பதா? என்றும், இது  எப்படி சாத்தியம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் பொங்கல் முதல் 100 சதவிகித இருக்கைக்கு தமிழகஅரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழகஅரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளத. சென்னை  கோபாலபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் தாக்கல் செய்த மனுவில் தமிழகஅரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது,  நீதிபதிகள் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், திரையரங்குகளில்100 விழுக்காடு இருக்கைகளுக்கு எப்படி அனுமதி வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், தற்போது தமிழகஅரசு வழங்கியுள்ள  50 விழுக்காடு இருக்கைகளுக்கான அனுமதி தொடரும் என்று உத்தரவிட்டதுடங்ன.   100 விழுக்காடு இருக்கைகளுக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது. 50 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதிக்கப்படுகிற தற்போதைய நிலையே தொடர வேண்டும். கொரோனாவுக்கான தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வரும்வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்திலுள்ள வழக்கோடு சேர்த்து  விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.