ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி: தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு

டில்லி:

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும், ஆலைக்கு தேவையான மின்வசதியை செய்து கொடுக்கவும் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்த நிலையில், மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்து நிரந்தரமாக முடியது.

இதை எதிர்த்து  ஸ்டெர்லைட் நிர்வாகம் டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், வேதாந்தா நிர்வாகம், அலுவல பணிகளை மேற்கொள்ள முதலில் அனுமதி வழங்கியது. இதன் காரணமாக வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது ஓரளவுக்கு தெளிவானது.

ஆனால், தமிழக அரசு மற்றும் வைகோ போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆலை குறைத்து ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர்  குழுவை அமைத்தது.

இந்த குழுவினர் 3 நாட்கள் கண்துடைப்புக்காக ஆய்வு செய்துவிட்டு கடந்த மாதம் 26-ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.  அந்த அறிக்கையில், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், மீண்டும் ஆலையை திறக்கலாம், ஆனால்,  குழுவினரால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்தது.

ஆனால், இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. அதைத்தொடர்ந்து இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது.

அதன்படி,  இன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பில் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும்,  ஸ்டெர்லைட் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

ஆலை உள்ள பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குறித்து தினசரி ஆய்வு செய்து அறிக்கை இணை தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும்,  3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்கு பின்னடைவையும், தூத்துக்குடி பகுதி மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி