அணுசக்தி கப்பலை பார்வையிட அமெரிக்காவுக்கு அனுமதி!! இந்தியா மீது ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ:

ரஷ்ய அணு சக்தியுடன் இயங்கும் ஐஎன்எஸ் சக்ரா நீர்மூழ்கி கப்பலை பார்வையிட அமெரிக்க கடற்படையினரை இந்தியா அனுமதித்தாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. இதனால் 2வது அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட இதர ஆயுதங்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

2011ம் ஆண்டு முதல் ஐஎன்எஸ் சக்ரா என்ற அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் செயல்பட்டு வருகிறது. இது ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலாகும். பழுது நீக்கத்துக்காக விசாகப்பட்டிணம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தபோது அமெரிக்க கடற்படை அதிகாரிகள் இந்த கப்பலை உள்ளே சென்று பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக இந்திய அதிகாரிகளுக்கு பெருந் தொகை லஞ்சமாக வழங்கப்பட்டிருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

ரஷ்யா கம்மர்சன்ட் நாளிதழில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அதில், ‘‘சமீபகாலமாக கூட்டாண்மை நாடான இந்தியா ரஷ்யாவுடனான நட்புக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. முதலாவதாக அமெரிக்கா பிரதிநிதிகள் இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான விக்ரமாதித்யாவை பார்வையிட அனுமதித்துள்ளனர். தற்போது இரண்டாவது முறையாக சக்ரா நீர்மூழ்கி கப்பலை பார்வையிட அனுமதித்துள்ளனர்’’ என்று சில ராணுவ முகமைகள் தெரிவித்ததாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘அமெரிக்காவின் அந்த குழுவில் நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை பல வழிகளில் சேகரித்திருப்பார்கள். இது போன்ற நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவ செயல்பாட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நல்ல முறையில் உருவாக்கி வைக்கப்பட்டுள்ள இந்த நட்புறவுக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக உலகில் ஆயுத இறக்குமதியில் இந்தியா மிகப் பெரிய நாடாக உள்ளது. இதில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் முக்கிய ஆயுத விற்பனையாளராக ரஷ்யா உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் தற்போதைய செயல்பாட்டால் இரண்டாவது அணு நீர்மூழ்கி கப்பல் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை இது பாதிக்கும் என்று ரஷ்யா தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரும் ரஷ்யா துணை பிரதமர் டிமிட்ரி ரோகோசின், சக்ரா விவகாரத்தை கிளப்புவார் என்று தெரிகிறது. அதோடு 2007ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 5வது தலைமுறை போர் விமான ஒப்பந்தம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.