கொல்கத்தா: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மேற்குவங்காளத்தில், வெடிகுண்டு கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பர்கானாஸ் மாவட்டத்தில்  நடத்தப்பட்ட சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 நாட்டு வெடிகுண்டுகளை  காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தைப் போலவே மேற்கு வங்காள சட்டமன்றத்துக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு 8 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27-ம் தேதி தொடங்கி, கடைசிகட்ட வாக்குப்பதிவு  ஏப்ரல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜக பகீரதபிரயத்தனம் செய்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை விலைபேசி, பாஜகவுக்கு இழுத்து வந்துள்ளது. மேலும் இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர். அங்கு  ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. 3வது அணியாக காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் இணைந்து களமிறங்கி உள்ளன.

இந்த நிலையில்,அங்கு அவ்வப்போது இரு கட்சியினரிடையே குண்டு வீச்சு போன்ற அச்சமூட்டும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து இரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பங்கர் பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது,  காசிப்பூர்,  பங்கர் வனப்பகுதியில் சுமார் 200 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்து கைப்பற்றினர். இந்த நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தது காட்டுப்பகுதியில் மறைத்துவைத்தது யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.