சிஆர்பிஎப்.ல் மோப்ப நாய்கள் பற்றாகுறை!! 12 வீரர்கள் பலியான பரிதாபம்

சுக்மா:

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கன்னி வெடி தாக்குதலில் 12 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் மோப்ப நாய்கள் பற்றாகுறை தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ‘‘கன்னி வெடிகளை கண்டுபிடிக்க மேலும் அதிகளவில் மோப்ப நாய்கள் தேவைப்படுகிறது’’ என்று உள்துறை அமைச்சக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவோயிஸ்ட் ஆதிக்க பகுதியின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் கூறுகையில்,‘‘ மார்ச் 11ம் தேதி தாக்குதல் நடந்த சிஆர்பிஎப் கம்பெனி வசம் ஒரே ஒரு மோப்ப நாய் மட்டுமே இருந்துள்ளது. மற்றொரு வழித்தடத்தில் அது பணியாற்றியதால் அது சோர்வடைந்திருந்தது. சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு சிஆர்பிஎப் குழுவினர் பாதுகாப்பு வழங்கிய போது அவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.

அந்த பகுதியில் உள்ள உள்ளூர் சந்தையை இணைக்கும் வகையில் அந்த சாலை அமைக்கப்பட்டு கொண்டிருந்தது. ஒரு குழு சாலை அருகிலும், மறு குழு உள்பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் இரண்டாவது குழு மீது தான் தாக்குதல் நடந்துள்ளது’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘கன்னி வெடிகளை கண்டுபிடிக்க அதிகளவில் நாய்கள் தான் தான் உதவியாக இருக்கும். ஒரு குழுவுக்கு சுமார் 100 வீரர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு நாய் மட்டுமே இருந்துள்ளது. அதுவும் பணி முடித்து சோர்வாக இருந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதி தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்ட நிலப்பரப்பாகும். இதற்கு நாய்கள் தான் பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலம் தான் பள்ளமான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்’’ என்றார்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட விஜயகுமார் இது தொடர்பான விரிவான அறிக்கையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு சமர்ப்பித்துள்ளார். மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருந்த பகுதியை வீரர்கள் கடந்து சென்ற போது தான் இந்த தாக்குதல் நடந்து சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்த குழுவினர் மாவோயிஸ்ட்களின் கடுமையான துப்பாக்கி சூட்டை கடந்து வந்துள்ளனர். பின்னர் எதிர் தாக்குதல் நடத்த தங்களை நிலைப்படுத்தினர். அப்போது தான் கன்னி வெடியில் சிக்கி பெரிய அளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அந்த பகுதி முழுவதும் அதிகளவில் கன்னி வெடிகள் புதைக்கப்பட்டிருந்தது. எதிர்தாக்குதல் நடத்திய போது தான் வீரர்கள் கன்னி வெடியில் சிக்கவிட்டனர்.

சுக்மா மாவட்டத்தில் பெய்ஜி & கொக்கச்சேரு இடையிலான 2 கி.மீ. சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக சிஆர்பிஎப் வீரர்கள் அங்கு சென்றனர். 13 ஆயுதங்களையும், இரண்டு வயர்லெஸ் கருவிகளையும் மாவோயிஸ்ட்கள் தூக்கிச் சென்றனர்.

கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பாதுகாப்பு படை மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மாவோயிஸ்ட் தொடர்பான வன்முறை சம்பவங்கள் 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.