குஜராத்: காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாகூர் வெற்றி

டில்லி:

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ஜிக்னேஷ் மேவானி மற்றும் அல்பேஷ் தாகூர் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி வாட்கம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார். சுயேட்சையாக போட்டியிட்ட இவருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. சீட் கிடைக்காததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜக.வில் இணைந்த லாவிங்ஜி தாகூர் இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவரான அல்பேஷ் தாகூர் குஜராத்தின் மிகப்பெரிய சட்டமன்ற தொகுதியான ராதான்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரை ஆதரிப்பதன் மூலம் மாநிலத்தில் உள்ள 30 சதவீத இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவை பெற்று காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது.

இவர்கள் இருவரோடு இத்தேர்தலை எதிர்கொண்ட படேல் சமூகத்தை வழிநடத்தும் 24 வயதாகும் ஹார்திக் படேல் மட்டும் இந்த தேர்தலில் வயது காரணமாக போட்டியிடவில்லை.

முன்னதாக ‘‘தேர்தல் கருத்து கணிப்புகள் முட்டாள் தனமானது. பாஜக கண்டிப்பாக இந்த முறை அரசு அமைக்காது’’ என்று ஜிக்னேஷ் மேவானி தெரிவித்திருந்தார்.

‘‘பிரதமர் மோடி பளபளப்பாக இருக்க விலை உயர்ந்த காலான்களை இறக்குமதி செய்து சாப்பிடுகிறார்’’ என்று அல்பேஷ் தாகூர் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.