புதுடெல்லி: தேசிய அளவில் வளர்ச்சியடைந்து செயல்படலாம் என்ற ஆம் ஆத்மி கட்சியின் கனவு, இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளின் மூலம் மோசமாக கலைந்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில், டெல்லி சட்டசபையில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை அள்ளி சாதனை படைத்தது. ஆனால், அதற்கு முன் நடந்திருந்த 2014 மக்களவைத் தேர்தலில் டெல்லியின் 7 இடங்களிலும் தோற்றிருந்தது.

அதேசமயம், பஞ்சாப் மாநிலத்தில் 4 இடங்களை வென்று கவனத்தைக் கவர்ந்தது. பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் 20 இடங்கள் வரை வென்று அசத்தியது.

ஆனால், தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் அக்கட்சிக்கு மறக்க வேண்டிய நிகழ்வாய் அமைந்துவிட்டது. டெல்லியில் உள்ள அனைத்து 7 இடங்களிலும் மொத்தமாய் தோற்ற அக்கட்சி, பஞ்சாப் மாநிலத்திலும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது.

கடந்த தேர்தலில் பஞ்சாபில் 25% வாக்குகள் பெற்ற ஆம் ஆத்மி, இந்த தேர்தலில் பெற்ற வாக்குகளோ வெறும் 7.36% மட்டுமே. அதேநேரம், டெல்லியில் அதன் வாக்கு சதவீதம் 33% என்பதிலிருந்து இந்த தேர்தலில் 18.1% என்பதாக குறைந்துவிட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.