Random image

பாஜக சார்பில் போட்டியா? : மோகன்லால் பதில்

டிகர் மோகன்லால் பா.ஜ.க.வில் இணைந்து அக்கட்சி சார்பாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்று யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில் இது குறித்து மோகன்லால் பதில் அளித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் மோகன்லால். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர். இவர் பாஜகவில் சேர இருப்பதாக கடந்த ஒரு வருடமாக யூகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் கேரளாவின் வயநாட்டில் நடக்க இருக்கும் சர்வதேச மலையாளி வட்டமேஜை அமைப்பின் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்தார் மோகன்லால். இதையடுத்து அவர் பாஜகவில் சேரப்போகிறார் என்கிற யூகம் இன்னும் அதிகமாக பரவியது.

மேலும், “பாஜகவில் இணையப்போகும் மோகன்லால் திருவனந்தபுரம் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடுவார். அவரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் இந்த விசயம்  மாநில பாஜகவுக்கு தெரியாது” என்று கேரள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர் தெரிவித்த்தாக தகவல் பரவியது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம் தொகுதி எம்.பி. சசிதரூரிடம், இது குறித்து கேட்டபோது,  “எனது தொகுதியில் அவருக்கு வீடு இருக்கிறது. ஒரு நடிகராக நான் அவரை மதிக்கிறேன். தங்கள் துறையை விட்டு மற்ற துறைக்கு யார் வந்தாலும் வெவ்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார்.

கேரள எதிர்க்கட்சித்தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான  ரமேஷ் சென்னிதாலா, “மோகன்லால் சிறந்த நடிகர். அவரை மக்கள் ரசிக்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரும் தவறைச் செய்வார் என்று நினைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இதுவரை மவுனமாக இருந்த மோகன்லால் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

அவர், “எனது அறக்கட்டளை நடத்தும் விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கவே, பிரதமர் மோடியை சந்தித்தேன். மற்றபடி திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பாக நான் போட்டியிடுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி கருத்து சொல்லவும் விரும்பவில்லை. எனது பணியை செய்ய விடுங்கள்” என்று காட்டமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.