நான் முதன் மந்திரியா? வியப்பில் உத்தவ் தாக்கரே

மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ள சிவசேனா தலைவர், நான் முதன்மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைத்துப்பார்க்க வில்லை என்று வியப்புடனும், நெகிழ்ச்சியுடனும் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மராட்டியர்களுக்கே சொந்தம் என்று குரல் எழுப்பி தொடங்கப்பட்டதுதான் பால்தாக்கரே வின் சிவசேனா கட்சி. இந்துத்துவா கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட சிவசேனா கடந்த 1989ம் ஆண்டு முதல் பாஜகவுடன் நட்பு பாராட்டி வநதது. கடந்தஎ  2014 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதுபோல, இந்த சட்டமன்ற தேர்தலையும் சந்தித்து வெற்றி பெற்ற நிலையில், அதிகாரப்பகிர்வில் ஏற்பட்ட மோதல் காரணமாக, தங்களது 30 ஆண்டுகளை நட்பை இரு கட்சிகளும் முறித்துக் கொண்டன.

இதையடுத்து, ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கிய சிவசேனா, பரம எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியது. அதன்படி குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டு, மாநிலத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே 5ஆண்டுகாலம் பதவி வகிப்பார் என்று முடிவு செய்யப்பட்டு, கூட்டணி கட்சிகளின் சார்பில் முதல்வராகவும் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து நாளை மாலை, உத்தவ் தாக்கரே மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, நான் மராட்டிய மாநில முதல்வராக பதவி ஏற்பேன் என்று கனவில்கூட நினைத்தது கிடையாது என்று வியப்பு மேலிட தெரிவித்தவர்… இதற்கான எனது நன்றியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கும் நன்றி தெரிவிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

கடந்த 30 ஆண்டுகளாக தங்களுடன் நட்பு பாராட்டி வந்தவர்கள், எங்களை புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றுள்ள நிலையில்,  கடந்த  30 ஆண்டுகளாக யாரை எதிரிகள் என்று நினைத்து நாங்கள் அரசியல் செய்து வந்தோமோ, அவர்கள் தற்போது நண்பராக மாறி, எங்களுக்கு தோள் கொடுத்துள்ளார்கள்…  மாறுபட்ட கொள்கைகள் கொண்ட நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்றார்.

காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் தலைவர்கள் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.இந்த அளவுக்கு நம்பிக்கை 30ஆண்டு கால நண்பனான பாஜகவு வைத்திருக்கவில்லை என்று தெரிவித்தவர், அவர்கள் என்னுடன் வெறுப்பு அரசியல்தான் நடத்தினார்கள்,  தேவை ஏற்படும்போது மட்டும்தான் பாரதிய ஜனதா என்னை பயன்படுத்திக் கொண்டது. மற்ற நேரங்களில் என்னை அவர்கள் கண்டு கொண்டதே இல்லை என்றும், எங்களது நட்பையும், தேவையையும் அவர்கள் எப்போதுமே உதாசீதனம் தான் செய்து வந்தார்கள் என்று குற்றம் சாட்டினார்.

எனது தலைமையிலான அரசு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு முன்னுதாரணமான அரசாக அமையும் என்று உறுதி கூறுவதாக தெரிவித்தவர், தனிப்பட்ட முறையில் யார் மீதும் பழிவாங்கும் உணர்ச்சியுடன் நடந்து கொள்ள மாட்டேன். எனது அரசும் அப்படி செயல்படாது என்று உறுதி அளித்தார்.

மேலும் தனது தலைமையிலான  ஆட்சி சுமூகமாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த புதிய கூட்டணியை மராட்டிய மாநில மக்களும் ஏற்றுக் கொண்டு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாத உத்தவ் தாக்கரே, அடுத்த 6 மாதத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வேண்டிய நிலை உருவாகி இருப்பதால், அவருக்கு வழி விடும் வகையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து இதுவரை ஒருவர்கூட தேர்தலை சந்திக்காத நிலையில், முதன்முறையாக, ஆதித்யா தாக்கரேதான் இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை முதல்வராக்கவே உத்தவ் தாக்கரே முயற்சி மேற்கொண்டார்.

ஆனால்,  ஆதித்ய தாக்கரேவின் (வயது 29) வயதை குறிப்பிட்டு, அவரை முதல்வராக்க என்சிபி, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஒத்துக்கொள்ள மறுத்துவிட்ட நிலையில், உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ஏற்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.