சொகுசு கார் வழக்கில் அமலாபால் கைது: கேரள போலீசார் அதிரடி!

கொச்சி,

போலியான புதுச்சேரி முகவரி கொடுத்து  சொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை அமலாபாலை கேரள போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், மலையாள சினிமாக்களில் நடித்து வரும் நடிகை அமலாபால். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பென்ஸ் எஸ் கிளாஸ் ரக சொகுசு கார் வாங்கினார். இந்த காரை புதுச்சேரியில் பதிவு செய்தால் வரி விலக்கு கிடைக்கும் நோக்கத்தில் புதுச்சேரி முகவரியில் காரை பதிவு செய்துள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுவாக இதுபோன்ற சொகுசு கார்களை தமிழகம், கேரளாவில் பதிவு செய்ய வேண்டுமென்றால்,  பதிவு கட்டணமாக ரூ. 20 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில்  புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் ரூ. 1.50 லட்சமே போதுமானது.

இந்த சலுகை காரணமாக, அமலாபால் தான் வாங்கிய புது பென்ஸ் காரை  புதுச்சேரியில் பதிவு செய்து கேரளாவில் உபயோகப்படுத்தி வந்தார்.

ஆனால்,  கேரளா போக்குவரத்து துறை சான்றிதழும் வாங்காமல் உபயோகப்படுத்தி வந்தார். இதுகுறித்து கேரள போக்குவரத்து துறை போலீசார் ஆவனம் செய்தபோது,  அமலாபால் ஆவணத்தில் தெரிவித்திருந்த புதுச்சேரி முகவரி போலி என தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் அமலாபாலுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில்,  அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் விடுதலை செய்தனர்.