அமலா பால் வரி மோசடி : ஏழாண்டு வரை சிறை தண்டனை கிடைக்கலாம்!

திருவனந்தபுரம்

பிரபல நடிகை அமலா பால் தனது வாகனத்தை புதுச்சேரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன

தமிழ், மலையாள திரையுலகில் புகழ் பெற்ற நடிகை அமலா பால்.   மைனா, வேலையில்லா பட்டதாரி, சிந்து சமவெளி, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் சமீபத்தில் மெர்சிடிஸ் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.    இதன் விலை ரூ ஒரு கோடி ஆகும்.   இந்த வாகனத்தை இவர் தனது மாநிலமான கேரளாவில் வாங்காமல் புதுச்சேரியில் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த வாகனம் புதுச்சேரியில் பதிவு செய்யப் பட்டுள்ளதால் கேரள அரசுக்கு ரூ.20 லட்சம் வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது.    புதுச்சேரி வாகன சட்டப்படி புதுச்சேரியை சொந்த மாநிலமாக கொண்டவரின் வாகனங்கள் மட்டுமே புதுச்சேரியில் பதிவு செய்யப்படும்.   அதனால் அமலாபால் புதுச்சேரியை சேர்ந்த ஒரு மாணவரின் பெயரில் அவருக்கே தெரியாமல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து வந்துள்ள தகவல்களின் அடிப்படையில் எர்ணாகுளம் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.   போலி பெயரிலோ அல்லது முகவரியிலோ வாகனத்தை பதிவு செய்பவர்களுக்கு ஏழாண்டு வரை சிறையில் அடைக்க சட்டம் உள்ளதால் இந்தக் குற்றம் நிரூபிக்கப் பட்டால் அமலா பால் ஏழாண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரும் என பெயர் தெரிவிக்க விரும்பாத கேரள அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.