புதுச்சேரி,

மலாபால் கார் பதிவு விவகாரத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், தவறு நடந்திருக்கிறது என்று கவர்னர் கிரண்பேடியும் மாறுபட்ட தகவல்களை வெளிப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த அமலாபால், “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை அமலாபால் 1 கோடி ரூபாய்க்கு , மெர்சிடிஸ் ‘எஸ்’ ரக காரை வாங்கினார். இந்தக் காரை கேரளாவில் பதிவு செய்தால் கணிசமான தொகை சாலை வரியாக கட்ட வேண்டும். இதைத் தவிர்க்க புதுச்சேரியில் வேறு ஒரு இளைஞரின் பெயரில் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி தனது காரை அமலாபால் பதிவு செய்துள்ளார். இது சட்டப்படி தவறு.

ஏனென்றால் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, அங்கு கார் பதிவுசெய்ய முடியும். தவிர தன் பெயரில் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது அந்த இளைஞருக்கே தெரியாது. இந்த விவகாரம் இப்போது வெடித்துள்ளது. குற்றச்சாட்டு உறுதியானால் அமலாபாலுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில்,  நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, “நடிகை அமலாபால் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாய்  புகார் வந்துள்ளது. அதுதொடர்பாக முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், அமலாபால் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததைப்போல் வேறு யாரெல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என விசாரணை செய்ய புதுச்சேரி போக்குவரத்துத் துறை ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளேன். இதுதொடர்பாக அவர் 15 நாள்களுக்குள் விசாரணை நடத்துவார்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி, ” இந்த வாகனப் பதிவில் எந்த தவறும் நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

ஒரே விவகாரம் குறித்து கவர்னரும், முதல்வரும் மாறுபட்ட தகவல்களைத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.